செவ்வாய், 30 அக்டோபர், 2012

6. அறிதல் முயற்சி (பிரம்மம்)

கவிதை - 19

அறிதல் முயற்சி (பிரம்மம்)*     இரண்டற்ற ஒன்றாக
       ஒன்றல்ல இரண்டாக
       அவை மறுத்து மூன்றாக
       எதுவென்று அறியாத உண்மை நோக்கியப் பயணம்
       முடிவற்ற கருத்துக்களால் சூழப்பட்டுள்ளது,

*     உருவானதா ?
       உருவாக்கப்பட்டதா ?
       கேள்விகளின் தொடர் மோதல்
       விடையற்ற விடைகளினால்
       சிக்கலின் நுனி தொலைத்து அலைகிறது,

*     ஐந்து பூதங்கள்
       எட்டு திசைகள்
       முக்காலங்கள்
       அறிந்த சில கிரகங்களோடு சூரியன் நிலவு
       இவையெல்லாம் அறியப்படாத உண்மையின் பகுதியா? முழுமையா ?

*     தெரியாத இரகசியங்கள் தேடி
       காலம் தோறும் சிந்தித்தலின் உச்சம் பகிர்ந்தவை
       அடுத்தக் கட்ட சிந்தனையின் ஆரம்பப் புள்ளியோ ?
       ஏன் 
       எளிமையான வாக்கியங்களைப் புரிதலில் குழப்பம்
       மிகை அறிவின் விளக்க கடுமையினாலா ?

*     அகம் சுருக்கி உள் ஆழ்ந்து பெரிதினைத் தேட
       அது பெரிதல்ல சிறிதல்ல
       எதைக் கொண்டு அளவிட ?
       அறிவு விரித்து வெளி அகன்று மையம் தேட
       அது அருகில்லை தொலைவில்லை
       எவ்வாறு தூரம் சொல்ல ?

 *    தொடரும் சிந்தனைகளின் வேர் எது ?
       வேர் தேடி அலையும் நீர் எது ?
       மண் பிளந்து மேல் எழும் தாவர ஆசைகள்
       வெண்கதிர் வேண்டி நிற்கும் இயல்பு ..............!!
- பகு,       


வெள்ளி, 26 அக்டோபர், 2012

5. முரண் சொல்

கவிதை - 18


முரண் சொல் *     ஆகாயம் தொட முயலும் வாக்கிய அமைப்புக்கள்
       வண்ணங்களின் தொடர் பிரிவில்
       வேற்றுமைகளோடேயே பயணம் செய்கிறது

       தொடக்கூடிய எளிய இலக்குகளை
       தொடுகைத் தொலைவை நீட்டித்தே அளக்கிறது

       சொற்களின் அமைப்பில் இருக்கும் கருணையும் புரட்சியும்
       மனதில் தோன்றாதது இயல்பாக அமைகிறது

       சுயநலம் பேசுவதே பொதுநலம் ஆனச் சூழல்கள் 
       பேதங்களை இயற்கை ஆக்குகிறது,

       வர்க்கங்களை சமநிலைப்படுத்தும் கோட்பாடு
       வாதங்களில் மட்டுமே உண்மையாகிறது

       சமத்துவம் வேண்டும் எழுத்துக்கள் எல்லாம்
       சதவீதங்களில் ஒதுங்கி வாழவே ஆசைப்படுகிறது

       இல்லாமைச் சுட்டும் தொடர் வரிகள்
       இயலாமைக் கண்டு எள்ளுவது ரசிக்கப்படுகிறது

       ஒற்றுமை வேண்டும் கருத்துக்கள் பொதுவாக
       ஒற்றுமை மறந்தவர்களால் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது.........!- பகு,

    
  

வியாழன், 25 அக்டோபர், 2012

4. ஒரு கணம்

கவிதை - 17


ஒரு கணம்


*     மண் மீது மோதும் மழைத்துளி
       எழுப்புகின்ற மண் வாசம்
       உள் நுழைந்து
       மறைத்துவைத்த எண்ணங்களின்
       நினைவைத் தூண்டி
       சிதறிய கனவுகளின் அழகியலில்
       சுய விரக்தியோடு மூழ்க வைக்கிறது,

*     எத்துணை ஆசைகள்
       மண்பானையில் கசியும் நீராய்
       நழுவியும் மறைந்தும்
       புற அனுபவ முடிச்சுக்கள்
       வேர்த்து நசிந்தாலும்
       கனவுகள் செதுக்கிய காலவெளி
       மனதின் ஈரத்தால் குளிரவே செய்கிறது,

*     தொடரந்து தடம் பதித்தும்
       தடம் அழித்தும் தொடர்ந்து
       மழை நெகிழ்த்தி நகர்த்தும் மண்ணோடு
       வாழ்தல் நகர்ந்துகொண்டேயிருக்கிறது
       குழிந்தும் குவிந்தும் .................


- பகு,
       
        
      

வெள்ளி, 19 அக்டோபர், 2012

3. மனம் (இடைவெளியில்)

கவிதை - 16

மனம் (இடைவெளியில்)*     நீண்ட பயணத்தின் இடைவெளி அமைதியில்
       இங்கும் அங்கும்
       காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன,
       திசைகளின் வெளியில் 
       இரகசியங்கள் தூவப்படுகின்றன,
       சுவாசத்தின் இறுதிக் காற்றின் வேகம்
       சுழன்றடிக்கும் புயலின் ஆரம்பப்புள்ளியாகிறது,
       மறைந்துவிடாத பெருங்கடல் ஆசைகள்
       அலையலையாய் அலைந்து உறங்குவதேயில்லை,
       பெயர் கூறி அழைக்கப்பட்ட உருவங்கள்
       பிறிதொன்றாய் குணங்களால் தோன்றுகின்றன,
       வண்ணமற்ற வாழ்வின் பொழுதுகள்
       நிறப்பிரிகை ஒளிகளால் வேறுபடுத்தப்படுகிறது,
       வெளியில் வரத்துடிக்காத ஒலிச்சொற்கள்
       மௌனமாய் இருளில் புதைக்கப்படுகின்றன,
       தனிமையின் உள்ளீடற்ற வெண்ணொளி
       கானல் தோற்றங்களின் அடிப்படையாகிறது,
    
       இடைவெளியில் தோன்றி மறையும் புன்னகை
       திட்டமிடும் அடுத்த நகர்விற்கு.........


- பகு,
      
     
       

வியாழன், 4 அக்டோபர், 2012

2. இயல்பு (கனவு)

கவிதை - 15

இயல்பு (கனவு)*     இருள் கிழித்து
       புலன் மயக்கி தோன்றி மறையும் கனவுகள்
       நாடோடிக் கதைகள் சொல்லும் நகரமெங்கும் உலாவரும்
       நிழலாக முகம் காட்டும் மனிதர்களால் நிறைந்த சுற்றம்
       மௌனமான பாவனையால் நெருங்கி முகர்ந்து கடந்து செல்லும்
       பொய்யான உணர்வலையால் அழுந்துகின்ற அங்கம் மெல்ல
       பயங்கொண்டு திடுக்கிட்டு கண்விழித்து மெய் தேடும்,

*     ஆசையால் காமமுறும் மனம் மெல்ல ஆவலுடன்
       நிறுத்தப்பட்ட கனவினுள் பயணம் செய்ய வழிதேடும்
       சில நொடிகள்  தடைபட்ட பாதை திறந்து உள் இழுக்க
       காட்சி பிறழ்ந்து கதை மாறி விரும்பும் திசைகள் நோக்கிச் செல்லும்
       தவறவிட்ட களம் நெகிழ்த்து புத்தியினால் திருத்தப்பட
       முழுதான மயக்கம் மிரண்டு வேண்டும் வடிவில் வார்க்கப்படும்,

*     விருப்பமான மனிதரின் நிழல் முகம் தெளிவாகி
       ஒலியலைகள் தாங்கி வரும் சொற்களால் சூழல் நிறையும்
       உரையாடல் தொடர்ச்சியால் நினைவுகோரும் வெற்றிகள்
       விம்மியெழுந்து அரவணைத்து மன மகிழ்வில் போய் முடியும்
       மெய் தேடிய அறிவு மெல்ல கண்விழிக்க வெறுப்புக்கொண்டு
       கனவிலேயே வாழ்ந்திருக்க இருள் நீள வேண்டி நிற்கும்............


- பகு,
      
      

புதன், 3 அக்டோபர், 2012

1. சமயம்

கவிதை - 14

"சமயம்"*     இது மழை நீர் தேங்கியக் குட்டை அல்ல
       நகர்ந்துகொண்டே இருக்கும் ஆறு
       எல்லாப் பள்ளங்களையும் நிறைத்தே நகர்கிறது
       மறிக்கும் கற்களை மோதியும் உருட்டியும் விரைகிறது
       பொதுவாக
       பேதம் பிரிக்காமல்
       எல்லாவற்றையும் தன்மேல் மிதக்க அனுமதித்தபடியே உள்ளது
       ஆழ்ந்து பார்த்தால்
       இரகசியம் பகுத்தால்
       எப்பொழுதும் நம்மையே பிரதிபலிகிறது,

*     ஒழுங்கமைந்த வார்த்தைகள் போல் அல்ல பாதை
       அகன்றும் குறுகியும் சரிந்தும் சமமாயும்
       திட்டமிடப்படாத அனுபவங்களின் தொகுப்பு அது
       எப்பொழுதும் அவை
       நெறிகளை முன்வைத்தே வழிகாட்டுகின்றன
       அன்பும் ஒற்றுமையும் அமைதியும் முயற்சியும்
       குறிக்கோள்களாக முன்வைக்கப்படுகிறது,

*     எதை எதை கண்டு பயந்தோமோ ?
       எதை கண்டு வியந்தோமோ ?
       எதை சாத்தியமற்றதென்று நினைத்தோமோ ?
       அனைத்தையும் நேசி எனச் சொல்லி
       இயற்கையின் அரவணைப்பில் வாழ வழிசொல்கிறது
       முனைந்து போராடும் பரிணாம வளர்ச்சியில்
       வேறுபாடு சுட்டுகிறது,

*     இப்படிச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்
       எதை விட ? எதைச் சேர்க்க ?
       எல்லாமும் ஆகிய ஒன்றை பிரித்துப் பிரித்து அறிவதும்
       இதில் சாத்தியம்தான்
       வினாக்களும் விடைகளும் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன 
       பண்பாட்டுத் தளத்தின் நிறைகுறைகளோடு நகர்வுகள் உடையது
       வாழ்க்கையின் நினைவுகளையும் வரலாறுகளையும்
       தொகுத்துக் கொண்டேயிருக்கிறது
       கருத்துக்களின் மோதலோடு மோதி தவிர்த்தும் ஏற்றும்
       நீண்ட மரபுகளையும் செறிவுகளையும் அடித்தளமாய் கொண்டது 
       புதியவைகளை விலக்காமல் முன்னேறும் இயல்புடையது,
       எப்பொழுதும்
       மாற்றத்தின் மாறாத உண்மைகளால் பிணைக்கப்பட்டது.........- பகு,