வியாழன், 27 செப்டம்பர், 2012

5. மெய் தேடுதல் (பிரம்மம்)

கவிதை - 13

மெய் தேடுதல்  (பிரம்மம்)


*     பெரிதிலும் பெரியதாக
       குணங்களின் குணமாக
       அறிவின் அறிவாக
       ஆனந்தத்தின் ஆனந்தமாக
       பிரிந்தும்  பிரியாத ஒன்றாக
       எல்லைகள் அற்றதாக
       வாதம் செய்து கொண்டேயிருக்கலாம்
       வரையறைகள் செய்ய இயலாததாகவும் சொல்லலாம்,

*     இரண்டற்ற ஒன்றாகக்  கருதலாம்
       ஒன்று சிதறி பலதானதாகக் கணக்கிடலாம்
       குண பேதக் காரணங்களை அடுக்கலாம்
       பௌதீகத்  தோற்றங்களை  முன்வைக்கலாம்
       சிந்தனையின் கருத்துக்களை எடுத்தாழலாம்,
       எதுவென்று அறியவே
       முடிவற்றப் பயணம்
       வாக்கியங்களின் பொருள் ஆழத்தில்
       தத்துவ உருவாக்கம்,

*     கீழிலிருந்து மேல்வரை  அடுக்கடுக்காய் கற்பிதம் போல்
       பொருள் ஒன்றை பகுத்துப் பகுத்து
       அணுவரைச் செல்லலாம்
       அலைகின்ற மனதை உள்நோக்கித்  திருப்பித் திருப்பி
       அசைவற்று அறிவை
       குவி ஆடி ஆக்கி
       அறியாத வெளிகளை அறிய முயலலாம்,

*     வாழ்தலின் காரணங்கள் அறியப்படாமல்
       காரியத் தொடர்ச்சிகள் புரிபடாமல்
       அச்சமுள்ள மனதைக் குடைகின்ற கேள்விகள்
       இயற்கையின் இயல்புகளை ஆச்சர்யப்படுத்தும்
       எப்பொழுதும்
       அறியப்படாத ஒன்றை வணங்கத் தூண்டும்,
      

*     விரிந்து வளர்த்தலை அறிய அறிய
       சுருங்கித் தேய்தல் குழப்பமூட்டும்
       தொடர்ந்து மாறுதலைப் பேசப் பேச
       மாறாதிருத்தல் பின்தொடரும்
       திசைகள் தோறும் காலப்பாதை
       முடிவுகள் தேடும் சிந்தனைப் போதை,
       மருண்டு மயங்கி
       மாயை என்குமா ?
       மாயை களைத்து உண்மை காணுமா ?
       யோசி ..........!!- பகு,
       
      


      


    
      

திங்கள், 24 செப்டம்பர், 2012

4. அடையாளம்

கவிதை - 12

அடையாளம் *     எப்பொழுதும் அடையாளங்கள்
       மனப் படிமானங்களின் அடி ஆழத்திலிருந்தே
       உருவாவதாகச் சொல்லப்படுகிறது,
       எதிர்மறை எண்ணங்கள் கூட
       ஏதோ ஓர் அடையாளத்துடனேயே
       குறிக்கப்படுகிறது,

*     எதற்கும் எங்கேயும் காலம்தோறும்
       குறிக்கப்படாத
       அடையாளங்கள்
       பொய்யானதாக மனதில் பதிகிறது
       குறியீடு அற்ற
       ஒன்று இல்லையென,

*     அடையாளப்படுத்தப்படாத எதையும்
       அறிவு ஏற்பதில்லை 
       ஓசைகளைக் கூட
       குறியீடுகளின் வாயிலாகவே
       அறிய முயல்கிறோம்
       ஓசையே இல்லாத மௌனத்தையும்
       அடையாளம் இடாமல்
       அறியமுடிவதேயில்லை,

*     எதற்காக எவையும் அடையாளப்படுத்தப்படுகிறது
       ஒளி பிரதிபலிக்காத எவற்றையும்
       கண்கள் பார்ப்பதில்லை என்பதலா ?
       இல்லை
       சிந்தனைகளின் தொடர்ச்சி
       அறியப்படாத வெளியில் அறுபடுவதாலா ?

*     பதில்கள் அறிய இயலாத
       கேள்விகளுக்கும்
       விளக்கம் அளித்து
       அடையாளப்படுத்தாவிட்டால்
       காரியக் காரணத்  தொடர்பை    
       உண்மையானதாக
       நம்பாது மனது.,- பகு,      

வியாழன், 20 செப்டம்பர், 2012

3. ஏக்கம் (காதல்)

கவிதை - 11

ஏக்கம் (காதல்)*     விழிகள் காத்திருக்கின்றன
       நீ புன்னகைத்து என்னை பார்த்த கணத்தை
       மீண்டும் காண.............

*     சிறியவளாய் சிறகு தாங்கியப் பறவையாய்
       என்னை கடந்து சென்றாய்
       தென்றலை என்புறம் தள்ளி
       கனவுகளின் உள் நுழைந்து
       வெளிவரும் முன்னர்
       கலைந்து விட்டாய்,

*     உன் பெயரறியாமல்
       நொடிமுள் நகரும் ஒலியுடன் காத்திருந்தேன்
       பொய்யாய் இரவுகள்
       தூக்கத்தைத் தொலைத்து உறங்கின.
       ஆனால்,
       இப்பொழுது
       பெயர் அறிந்த மனமோ
       இருதயம் துடிக்கும் ஓசையைக் கூட
       உன் பெயரைச் சொல்லியே
       அழைக்கிறது,

*     அலையலையான  சிந்தனைகளை ஏன் சலனமில்லாமல் செய்கிறாய்
       அரவணைத்து விளையாடி
       சொல்லாடும் பிம்பங்களை ஏன் உருவாக்குகிறாய்
       உன் மனதில் நான் படியக் காத்திருக்கிறேன்
       யோசிக்காமல் சொல்
       சரி என்று.....,

*     புதிர்களைத் தூவிச் செல்லாதே
       மெல்லியக் காற்றில் என்னையே பிரதிபலிக்கிறது
       பனித்துகள் உணர்ச்சிகளின் வழியே
       நான்
       எப்பொழுதும்
       உன்னைச் சுற்றியே.......

*     அன்பானவளே...!!- பகு,

       

2. அரசியல் (ஈழம்)

கவிதை - 10

அரசியல் (ஈழம்)*     புரிபடாத வாக்கியங்கள்
       நிறைந்த உலகு இது.
       சொற்களின் கோர்வையில்
       பிணங்களைத்
       தொங்கவிடும்
       சித்தாத்தங்கள்
       பயமுறுத்தியும், பரிகாசம் செய்தும்
       உயிர்களை
       விலை பேசியபடியே அலைகின்றன,

*     பொய்யான வார்த்தைகளின் பலத்தினால்
       உண்மைகள்
       புறக்கணிக்கப்படுகின்றன,
       விருப்பப்படாத ஒன்றையே
       தேர்ந்தெடுத்து வாழ
       சூழல் கட்டாயப்படுத்துகிறது,

*     உணர்ச்சித்  துடிக்கப்  பேசும்
       கட்சித் தலைவர்கள் முன்
       சுயநலங்கள் மட்டுமே
       நிற்கின்றன,
       பொதுநலச் சொற்கள்
       வரிசையாக
       பேச்சுத் திறமையின்
       அடையாளமாகச் சுட்டப்படுகிறது,

*    இறந்தவர்களின் மீதேறி
      அழுகைகளை அரித்து அரித்து
      அரசியல் செய்யும்
      சிந்தனை சிற்பிகள்
      தாங்கள் வாழ
      சிரிப்புகளின் நடுவே
      இரத்த விதைகளை
      தூவுகிறார்கள்,

*    உரிமைகளை பற்றிப்பேசி
      உடைகளை மட்டும் பறிக்கும்
      கோமாளிகள்
      அல்ல
      இவர்கள்,
      எப்பொழுதும்
      எல்லோரையும்
      அம்மணமாக அலையவைக்கத்
      திட்டமிடும்
      புத்திசாலிகள்..........


- பகு,  


       
      

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

1. ஸ்பரிசம் (காதல்)

கவிதை - 9

ஸ்பரிசம் (காதல்)*     வான் பரப்பில் 
       முட்டி மோதி 
       எதிரொலிக்கும் ஒலியலைகள் 
       வார்த்தை தாங்கி 
       வழுக்கி நழுவி 
       செவியில் நுழைந்து 
       புன்னகைக்கும்.......

*     காரணம் கேட்கும் 
       சிந்தனைக்கு 
       காரியங்கள் மெல்லச் சொல்லி 
       கவிதை வடிவம் 
       எடுத்து நிற்க 
       மொழியறிவை 
       துணைக்கு அழைக்கும்,

*     பால் கவர்ச்சி விதிகளெல்லாம் 
       கணக்குகளில் சரியாய் பொருந்தும் 
       காலம் மெல்ல 
       நகைத்து வெட்கி 
       கண்கள் வழியே 
       அலைகள் நெகிழும்,

*     முன் நகர்ந்தும் 
       பின் நின்றும் 
       இடைவெளிகள் நிரப்பப்படும் 
       மலர்களும் 
       நிலாவும் 
       உவமைகளாய் வெளிப்படும் 
       நகராத இடங்கள் கூட 
       இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும்,

*     வர்ணனைகள் 
       ஆறாக 
       பள்ளம் மேடு பரவிப் பரவி 
       வெட்கம் தந்து  
       தலை குனிந்து 
       மனதில் ஆசை 
       ஓவியம் வரையும்,

*     தலையணைகள் 
       நண்பனாகும் 
       கதைகள் கேட்டு 
       சிரித்து மகிழும் 
       கண்ணீர் சிந்தும் நேரத்தில் 
       கையாய் மாறி 
       அணைத்து நிற்கும்.....!


- பகு,