செவ்வாய், 30 அக்டோபர், 2012

6. அறிதல் முயற்சி (பிரம்மம்)

கவிதை - 19

அறிதல் முயற்சி (பிரம்மம்)*     இரண்டற்ற ஒன்றாக
       ஒன்றல்ல இரண்டாக
       அவை மறுத்து மூன்றாக
       எதுவென்று அறியாத உண்மை நோக்கியப் பயணம்
       முடிவற்ற கருத்துக்களால் சூழப்பட்டுள்ளது,

*     உருவானதா ?
       உருவாக்கப்பட்டதா ?
       கேள்விகளின் தொடர் மோதல்
       விடையற்ற விடைகளினால்
       சிக்கலின் நுனி தொலைத்து அலைகிறது,

*     ஐந்து பூதங்கள்
       எட்டு திசைகள்
       முக்காலங்கள்
       அறிந்த சில கிரகங்களோடு சூரியன் நிலவு
       இவையெல்லாம் அறியப்படாத உண்மையின் பகுதியா? முழுமையா ?

*     தெரியாத இரகசியங்கள் தேடி
       காலம் தோறும் சிந்தித்தலின் உச்சம் பகிர்ந்தவை
       அடுத்தக் கட்ட சிந்தனையின் ஆரம்பப் புள்ளியோ ?
       ஏன் 
       எளிமையான வாக்கியங்களைப் புரிதலில் குழப்பம்
       மிகை அறிவின் விளக்க கடுமையினாலா ?

*     அகம் சுருக்கி உள் ஆழ்ந்து பெரிதினைத் தேட
       அது பெரிதல்ல சிறிதல்ல
       எதைக் கொண்டு அளவிட ?
       அறிவு விரித்து வெளி அகன்று மையம் தேட
       அது அருகில்லை தொலைவில்லை
       எவ்வாறு தூரம் சொல்ல ?

 *    தொடரும் சிந்தனைகளின் வேர் எது ?
       வேர் தேடி அலையும் நீர் எது ?
       மண் பிளந்து மேல் எழும் தாவர ஆசைகள்
       வெண்கதிர் வேண்டி நிற்கும் இயல்பு ..............!!
- பகு,       


வெள்ளி, 26 அக்டோபர், 2012

5. முரண் சொல்

கவிதை - 18


முரண் சொல் *     ஆகாயம் தொட முயலும் வாக்கிய அமைப்புக்கள்
       வண்ணங்களின் தொடர் பிரிவில்
       வேற்றுமைகளோடேயே பயணம் செய்கிறது

       தொடக்கூடிய எளிய இலக்குகளை
       தொடுகைத் தொலைவை நீட்டித்தே அளக்கிறது

       சொற்களின் அமைப்பில் இருக்கும் கருணையும் புரட்சியும்
       மனதில் தோன்றாதது இயல்பாக அமைகிறது

       சுயநலம் பேசுவதே பொதுநலம் ஆனச் சூழல்கள் 
       பேதங்களை இயற்கை ஆக்குகிறது,

       வர்க்கங்களை சமநிலைப்படுத்தும் கோட்பாடு
       வாதங்களில் மட்டுமே உண்மையாகிறது

       சமத்துவம் வேண்டும் எழுத்துக்கள் எல்லாம்
       சதவீதங்களில் ஒதுங்கி வாழவே ஆசைப்படுகிறது

       இல்லாமைச் சுட்டும் தொடர் வரிகள்
       இயலாமைக் கண்டு எள்ளுவது ரசிக்கப்படுகிறது

       ஒற்றுமை வேண்டும் கருத்துக்கள் பொதுவாக
       ஒற்றுமை மறந்தவர்களால் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது.........!- பகு,

    
  

வியாழன், 25 அக்டோபர், 2012

4. ஒரு கணம்

கவிதை - 17


ஒரு கணம்


*     மண் மீது மோதும் மழைத்துளி
       எழுப்புகின்ற மண் வாசம்
       உள் நுழைந்து
       மறைத்துவைத்த எண்ணங்களின்
       நினைவைத் தூண்டி
       சிதறிய கனவுகளின் அழகியலில்
       சுய விரக்தியோடு மூழ்க வைக்கிறது,

*     எத்துணை ஆசைகள்
       மண்பானையில் கசியும் நீராய்
       நழுவியும் மறைந்தும்
       புற அனுபவ முடிச்சுக்கள்
       வேர்த்து நசிந்தாலும்
       கனவுகள் செதுக்கிய காலவெளி
       மனதின் ஈரத்தால் குளிரவே செய்கிறது,

*     தொடரந்து தடம் பதித்தும்
       தடம் அழித்தும் தொடர்ந்து
       மழை நெகிழ்த்தி நகர்த்தும் மண்ணோடு
       வாழ்தல் நகர்ந்துகொண்டேயிருக்கிறது
       குழிந்தும் குவிந்தும் .................


- பகு,
       
        
      

வெள்ளி, 19 அக்டோபர், 2012

3. மனம் (இடைவெளியில்)

கவிதை - 16

மனம் (இடைவெளியில்)*     நீண்ட பயணத்தின் இடைவெளி அமைதியில்
       இங்கும் அங்கும்
       காலங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன,
       திசைகளின் வெளியில் 
       இரகசியங்கள் தூவப்படுகின்றன,
       சுவாசத்தின் இறுதிக் காற்றின் வேகம்
       சுழன்றடிக்கும் புயலின் ஆரம்பப்புள்ளியாகிறது,
       மறைந்துவிடாத பெருங்கடல் ஆசைகள்
       அலையலையாய் அலைந்து உறங்குவதேயில்லை,
       பெயர் கூறி அழைக்கப்பட்ட உருவங்கள்
       பிறிதொன்றாய் குணங்களால் தோன்றுகின்றன,
       வண்ணமற்ற வாழ்வின் பொழுதுகள்
       நிறப்பிரிகை ஒளிகளால் வேறுபடுத்தப்படுகிறது,
       வெளியில் வரத்துடிக்காத ஒலிச்சொற்கள்
       மௌனமாய் இருளில் புதைக்கப்படுகின்றன,
       தனிமையின் உள்ளீடற்ற வெண்ணொளி
       கானல் தோற்றங்களின் அடிப்படையாகிறது,
    
       இடைவெளியில் தோன்றி மறையும் புன்னகை
       திட்டமிடும் அடுத்த நகர்விற்கு.........


- பகு,
      
     
       

வியாழன், 4 அக்டோபர், 2012

2. இயல்பு (கனவு)

கவிதை - 15

இயல்பு (கனவு)*     இருள் கிழித்து
       புலன் மயக்கி தோன்றி மறையும் கனவுகள்
       நாடோடிக் கதைகள் சொல்லும் நகரமெங்கும் உலாவரும்
       நிழலாக முகம் காட்டும் மனிதர்களால் நிறைந்த சுற்றம்
       மௌனமான பாவனையால் நெருங்கி முகர்ந்து கடந்து செல்லும்
       பொய்யான உணர்வலையால் அழுந்துகின்ற அங்கம் மெல்ல
       பயங்கொண்டு திடுக்கிட்டு கண்விழித்து மெய் தேடும்,

*     ஆசையால் காமமுறும் மனம் மெல்ல ஆவலுடன்
       நிறுத்தப்பட்ட கனவினுள் பயணம் செய்ய வழிதேடும்
       சில நொடிகள்  தடைபட்ட பாதை திறந்து உள் இழுக்க
       காட்சி பிறழ்ந்து கதை மாறி விரும்பும் திசைகள் நோக்கிச் செல்லும்
       தவறவிட்ட களம் நெகிழ்த்து புத்தியினால் திருத்தப்பட
       முழுதான மயக்கம் மிரண்டு வேண்டும் வடிவில் வார்க்கப்படும்,

*     விருப்பமான மனிதரின் நிழல் முகம் தெளிவாகி
       ஒலியலைகள் தாங்கி வரும் சொற்களால் சூழல் நிறையும்
       உரையாடல் தொடர்ச்சியால் நினைவுகோரும் வெற்றிகள்
       விம்மியெழுந்து அரவணைத்து மன மகிழ்வில் போய் முடியும்
       மெய் தேடிய அறிவு மெல்ல கண்விழிக்க வெறுப்புக்கொண்டு
       கனவிலேயே வாழ்ந்திருக்க இருள் நீள வேண்டி நிற்கும்............


- பகு,
      
      

புதன், 3 அக்டோபர், 2012

1. சமயம்

கவிதை - 14

"சமயம்"*     இது மழை நீர் தேங்கியக் குட்டை அல்ல
       நகர்ந்துகொண்டே இருக்கும் ஆறு
       எல்லாப் பள்ளங்களையும் நிறைத்தே நகர்கிறது
       மறிக்கும் கற்களை மோதியும் உருட்டியும் விரைகிறது
       பொதுவாக
       பேதம் பிரிக்காமல்
       எல்லாவற்றையும் தன்மேல் மிதக்க அனுமதித்தபடியே உள்ளது
       ஆழ்ந்து பார்த்தால்
       இரகசியம் பகுத்தால்
       எப்பொழுதும் நம்மையே பிரதிபலிகிறது,

*     ஒழுங்கமைந்த வார்த்தைகள் போல் அல்ல பாதை
       அகன்றும் குறுகியும் சரிந்தும் சமமாயும்
       திட்டமிடப்படாத அனுபவங்களின் தொகுப்பு அது
       எப்பொழுதும் அவை
       நெறிகளை முன்வைத்தே வழிகாட்டுகின்றன
       அன்பும் ஒற்றுமையும் அமைதியும் முயற்சியும்
       குறிக்கோள்களாக முன்வைக்கப்படுகிறது,

*     எதை எதை கண்டு பயந்தோமோ ?
       எதை கண்டு வியந்தோமோ ?
       எதை சாத்தியமற்றதென்று நினைத்தோமோ ?
       அனைத்தையும் நேசி எனச் சொல்லி
       இயற்கையின் அரவணைப்பில் வாழ வழிசொல்கிறது
       முனைந்து போராடும் பரிணாம வளர்ச்சியில்
       வேறுபாடு சுட்டுகிறது,

*     இப்படிச் சொல்லிக்கொண்டேயிருக்கலாம்
       எதை விட ? எதைச் சேர்க்க ?
       எல்லாமும் ஆகிய ஒன்றை பிரித்துப் பிரித்து அறிவதும்
       இதில் சாத்தியம்தான்
       வினாக்களும் விடைகளும் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன 
       பண்பாட்டுத் தளத்தின் நிறைகுறைகளோடு நகர்வுகள் உடையது
       வாழ்க்கையின் நினைவுகளையும் வரலாறுகளையும்
       தொகுத்துக் கொண்டேயிருக்கிறது
       கருத்துக்களின் மோதலோடு மோதி தவிர்த்தும் ஏற்றும்
       நீண்ட மரபுகளையும் செறிவுகளையும் அடித்தளமாய் கொண்டது 
       புதியவைகளை விலக்காமல் முன்னேறும் இயல்புடையது,
       எப்பொழுதும்
       மாற்றத்தின் மாறாத உண்மைகளால் பிணைக்கப்பட்டது.........- பகு,
      

      

       

       


       
       
      

வியாழன், 27 செப்டம்பர், 2012

5. மெய் தேடுதல் (பிரம்மம்)

கவிதை - 13

மெய் தேடுதல்  (பிரம்மம்)


*     பெரிதிலும் பெரியதாக
       குணங்களின் குணமாக
       அறிவின் அறிவாக
       ஆனந்தத்தின் ஆனந்தமாக
       பிரிந்தும்  பிரியாத ஒன்றாக
       எல்லைகள் அற்றதாக
       வாதம் செய்து கொண்டேயிருக்கலாம்
       வரையறைகள் செய்ய இயலாததாகவும் சொல்லலாம்,

*     இரண்டற்ற ஒன்றாகக்  கருதலாம்
       ஒன்று சிதறி பலதானதாகக் கணக்கிடலாம்
       குண பேதக் காரணங்களை அடுக்கலாம்
       பௌதீகத்  தோற்றங்களை  முன்வைக்கலாம்
       சிந்தனையின் கருத்துக்களை எடுத்தாழலாம்,
       எதுவென்று அறியவே
       முடிவற்றப் பயணம்
       வாக்கியங்களின் பொருள் ஆழத்தில்
       தத்துவ உருவாக்கம்,

*     கீழிலிருந்து மேல்வரை  அடுக்கடுக்காய் கற்பிதம் போல்
       பொருள் ஒன்றை பகுத்துப் பகுத்து
       அணுவரைச் செல்லலாம்
       அலைகின்ற மனதை உள்நோக்கித்  திருப்பித் திருப்பி
       அசைவற்று அறிவை
       குவி ஆடி ஆக்கி
       அறியாத வெளிகளை அறிய முயலலாம்,

*     வாழ்தலின் காரணங்கள் அறியப்படாமல்
       காரியத் தொடர்ச்சிகள் புரிபடாமல்
       அச்சமுள்ள மனதைக் குடைகின்ற கேள்விகள்
       இயற்கையின் இயல்புகளை ஆச்சர்யப்படுத்தும்
       எப்பொழுதும்
       அறியப்படாத ஒன்றை வணங்கத் தூண்டும்,
      

*     விரிந்து வளர்த்தலை அறிய அறிய
       சுருங்கித் தேய்தல் குழப்பமூட்டும்
       தொடர்ந்து மாறுதலைப் பேசப் பேச
       மாறாதிருத்தல் பின்தொடரும்
       திசைகள் தோறும் காலப்பாதை
       முடிவுகள் தேடும் சிந்தனைப் போதை,
       மருண்டு மயங்கி
       மாயை என்குமா ?
       மாயை களைத்து உண்மை காணுமா ?
       யோசி ..........!!- பகு,
       
      


      


    
      

திங்கள், 24 செப்டம்பர், 2012

4. அடையாளம்

கவிதை - 12

அடையாளம் *     எப்பொழுதும் அடையாளங்கள்
       மனப் படிமானங்களின் அடி ஆழத்திலிருந்தே
       உருவாவதாகச் சொல்லப்படுகிறது,
       எதிர்மறை எண்ணங்கள் கூட
       ஏதோ ஓர் அடையாளத்துடனேயே
       குறிக்கப்படுகிறது,

*     எதற்கும் எங்கேயும் காலம்தோறும்
       குறிக்கப்படாத
       அடையாளங்கள்
       பொய்யானதாக மனதில் பதிகிறது
       குறியீடு அற்ற
       ஒன்று இல்லையென,

*     அடையாளப்படுத்தப்படாத எதையும்
       அறிவு ஏற்பதில்லை 
       ஓசைகளைக் கூட
       குறியீடுகளின் வாயிலாகவே
       அறிய முயல்கிறோம்
       ஓசையே இல்லாத மௌனத்தையும்
       அடையாளம் இடாமல்
       அறியமுடிவதேயில்லை,

*     எதற்காக எவையும் அடையாளப்படுத்தப்படுகிறது
       ஒளி பிரதிபலிக்காத எவற்றையும்
       கண்கள் பார்ப்பதில்லை என்பதலா ?
       இல்லை
       சிந்தனைகளின் தொடர்ச்சி
       அறியப்படாத வெளியில் அறுபடுவதாலா ?

*     பதில்கள் அறிய இயலாத
       கேள்விகளுக்கும்
       விளக்கம் அளித்து
       அடையாளப்படுத்தாவிட்டால்
       காரியக் காரணத்  தொடர்பை    
       உண்மையானதாக
       நம்பாது மனது.,- பகு,      

வியாழன், 20 செப்டம்பர், 2012

3. ஏக்கம் (காதல்)

கவிதை - 11

ஏக்கம் (காதல்)*     விழிகள் காத்திருக்கின்றன
       நீ புன்னகைத்து என்னை பார்த்த கணத்தை
       மீண்டும் காண.............

*     சிறியவளாய் சிறகு தாங்கியப் பறவையாய்
       என்னை கடந்து சென்றாய்
       தென்றலை என்புறம் தள்ளி
       கனவுகளின் உள் நுழைந்து
       வெளிவரும் முன்னர்
       கலைந்து விட்டாய்,

*     உன் பெயரறியாமல்
       நொடிமுள் நகரும் ஒலியுடன் காத்திருந்தேன்
       பொய்யாய் இரவுகள்
       தூக்கத்தைத் தொலைத்து உறங்கின.
       ஆனால்,
       இப்பொழுது
       பெயர் அறிந்த மனமோ
       இருதயம் துடிக்கும் ஓசையைக் கூட
       உன் பெயரைச் சொல்லியே
       அழைக்கிறது,

*     அலையலையான  சிந்தனைகளை ஏன் சலனமில்லாமல் செய்கிறாய்
       அரவணைத்து விளையாடி
       சொல்லாடும் பிம்பங்களை ஏன் உருவாக்குகிறாய்
       உன் மனதில் நான் படியக் காத்திருக்கிறேன்
       யோசிக்காமல் சொல்
       சரி என்று.....,

*     புதிர்களைத் தூவிச் செல்லாதே
       மெல்லியக் காற்றில் என்னையே பிரதிபலிக்கிறது
       பனித்துகள் உணர்ச்சிகளின் வழியே
       நான்
       எப்பொழுதும்
       உன்னைச் சுற்றியே.......

*     அன்பானவளே...!!- பகு,

       

2. அரசியல் (ஈழம்)

கவிதை - 10

அரசியல் (ஈழம்)*     புரிபடாத வாக்கியங்கள்
       நிறைந்த உலகு இது.
       சொற்களின் கோர்வையில்
       பிணங்களைத்
       தொங்கவிடும்
       சித்தாத்தங்கள்
       பயமுறுத்தியும், பரிகாசம் செய்தும்
       உயிர்களை
       விலை பேசியபடியே அலைகின்றன,

*     பொய்யான வார்த்தைகளின் பலத்தினால்
       உண்மைகள்
       புறக்கணிக்கப்படுகின்றன,
       விருப்பப்படாத ஒன்றையே
       தேர்ந்தெடுத்து வாழ
       சூழல் கட்டாயப்படுத்துகிறது,

*     உணர்ச்சித்  துடிக்கப்  பேசும்
       கட்சித் தலைவர்கள் முன்
       சுயநலங்கள் மட்டுமே
       நிற்கின்றன,
       பொதுநலச் சொற்கள்
       வரிசையாக
       பேச்சுத் திறமையின்
       அடையாளமாகச் சுட்டப்படுகிறது,

*    இறந்தவர்களின் மீதேறி
      அழுகைகளை அரித்து அரித்து
      அரசியல் செய்யும்
      சிந்தனை சிற்பிகள்
      தாங்கள் வாழ
      சிரிப்புகளின் நடுவே
      இரத்த விதைகளை
      தூவுகிறார்கள்,

*    உரிமைகளை பற்றிப்பேசி
      உடைகளை மட்டும் பறிக்கும்
      கோமாளிகள்
      அல்ல
      இவர்கள்,
      எப்பொழுதும்
      எல்லோரையும்
      அம்மணமாக அலையவைக்கத்
      திட்டமிடும்
      புத்திசாலிகள்..........


- பகு,  


       
      

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

1. ஸ்பரிசம் (காதல்)

கவிதை - 9

ஸ்பரிசம் (காதல்)*     வான் பரப்பில் 
       முட்டி மோதி 
       எதிரொலிக்கும் ஒலியலைகள் 
       வார்த்தை தாங்கி 
       வழுக்கி நழுவி 
       செவியில் நுழைந்து 
       புன்னகைக்கும்.......

*     காரணம் கேட்கும் 
       சிந்தனைக்கு 
       காரியங்கள் மெல்லச் சொல்லி 
       கவிதை வடிவம் 
       எடுத்து நிற்க 
       மொழியறிவை 
       துணைக்கு அழைக்கும்,

*     பால் கவர்ச்சி விதிகளெல்லாம் 
       கணக்குகளில் சரியாய் பொருந்தும் 
       காலம் மெல்ல 
       நகைத்து வெட்கி 
       கண்கள் வழியே 
       அலைகள் நெகிழும்,

*     முன் நகர்ந்தும் 
       பின் நின்றும் 
       இடைவெளிகள் நிரப்பப்படும் 
       மலர்களும் 
       நிலாவும் 
       உவமைகளாய் வெளிப்படும் 
       நகராத இடங்கள் கூட 
       இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கும்,

*     வர்ணனைகள் 
       ஆறாக 
       பள்ளம் மேடு பரவிப் பரவி 
       வெட்கம் தந்து  
       தலை குனிந்து 
       மனதில் ஆசை 
       ஓவியம் வரையும்,

*     தலையணைகள் 
       நண்பனாகும் 
       கதைகள் கேட்டு 
       சிரித்து மகிழும் 
       கண்ணீர் சிந்தும் நேரத்தில் 
       கையாய் மாறி 
       அணைத்து நிற்கும்.....!


- பகு,

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

9. முரண் (நாம்)

கவிதை - 8

முரண் (நாம்)

*     பன்னாட்டு வர்த்தகம் 
       பக்த்தறிவுப் பேச்சு 
       இதன் இயல்பு 
       எளிதில் 
       புரிவதேயில்லை......?

*     வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டியையும் 
       விலையில்லா அரிசியையும் 
       வாங்க 
       வரிசையில் நிற்பதே 
       போதும் என்கிறோம்.......!

*      சுதந்திரம் பற்றிப் பேசுவோம் 
        நேர்மையை உயிர் என்போம்
        ஒழுக்கக்கதைகளைச் சொல்லி 
        ஓட்டு இடப் பணம் பெறுவோம்
        எப்பொழுதும் 
        கையூட்டு 
        பெறுதலையும் கொடுத்தலையும் 
        திறமை எனப் 
        பெருமை பீற்றுவோம்........!?

*      தேசியக் கொடியில் 
        முகம் பார்த்து 
        கட்சிக் கொடிகளை 
        நெஞ்சில் சுமப்போம்,
        இந்தியன் என் உரக்கக் கூறி 
        ஊர் எல்லை தாண்டி 
        ஒற்றுமை மறுப்போம்
        சாதிகளின் உட்பிரிவுகளில் 
        மட்டுமே வாழ்வோம் 
        பொதுவாக 
        மொழிகளை வெறுத்து ஊமையாவோம்.......!?

*      துன்பம் இன்பம் விதி என்போம் 
        உழைப்பின் கூலியை 
        போதையில் இழப்போம் 
        சுத்தம் சுகாதாரம் எனப் பேசுவோம் 
        பார்க்கும் இடமெல்லாம் 
        எச்சிலும் துப்புவோம் 
        பெரும்பாலும்  
        சாலையோரங்களை 
        கழிப்பறை ஆக்குவோம்.......!?

*      விலைவாசி ஏற்றங்கள் தவறு 
        கண்டனம் செய்வோம் 
        விவசாயின்னாலே பாவம் 
        சோகம் என்போம் 
        வட்டி தள்ளுபடி செய்தால் 
        கோபம் கொள்வோம் 
        தினசரி சந்தையில் 
        பேரம் பேசுவோம் 
        ஏ.சி. அங்காடிகளில் அதிகவிலை 
        அறிந்தே தருவோம்
        பொதவாக 
        ஆடம்பரம் எனத் தெரிந்தும் 
        வாங்கிக் குவிப்போம்.......!?

 *     ஐ.டி. துறை இளையர்கள் 
       மோசம் என்போம் 
       பெருநகரப் பெண்களை 
       இழிவாய் பேசுவோம் 
       பெரும்பாலும் 
       மணமகன் வருவாய் 
       இலட்சங்களில் தேடுவோம் 
       மணப்பெண் அழகிற்கு 
       விளம்பரங்களை நாடுவோம் 
       வாரிசுகள் 
       கணிப்பொறியியலில் 
       எனப் பெருமை கொள்வோம்....!?

*    அண்டை வீட்டாரை 
      வெறுத்து ஒதுக்குவோம் 
      பொறாமை கூறி நிராகரிப்போம் 
      தெருப் பிரச்சனைகளில் 
      பயந்தே ஒதுங்குவோம் 
      பொதுவாக 
      அன்பே அனைத்திற்கும் 
      தீர்வு எனச் சொல்லுவோம்.,
      ஆம்பிளையாய் பொறந்தா 
      வீரம் இருக்கணும் என்போம்...!?


- பகு,

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

8. வாழ்க்கை

கவிதை - 7

வாழ்க்கை !!*      உயிர் ஒன்றைக்
        காண்பதற்கு 
        மெய் இரண்டும்
        கண் விழித்து
        வழிகள் சொன்னது,
        ஒன்று பிறப்பு
        மற்றொன்று மரணம்,

*      யாருமே அறிவதில்லை
        வாழ்க்கையின்
        எண்ணற்ற இரகசியங்களை,
        நா அசைந்து
        வெளியில் விட்ட
        சொற்களை,
        காற்றும் காலமும்
        தின்று கொண்டேதான் 
        இருப்பதை......

*     காட்சிகளின் விரிவும் செறிவும்
       நொடிகள் தோறும்
       மாறுகிறது.........
       கண்கள் எப்பொழுதும்
       கடந்து செல்வதையே
       காண்கின்றன,

*     ஞாபாகக் கூறுகளின்
       எச்சமேல்லாம்
       நேற்றைய பொழுதுகளின்
       இயல்புகளால்
       நிறைந்து
       வழிந்து ஓடுகிறது,

*     ஒவ்வொரு முறையும்
       மூச்சு விடுதலில்
       நிகழ்காலம்
       இறக்கிறது,
       மூச்சை உள் இழுத்தலில்
       எதிர்காலம்
       நிகழாகிறது,
       எதிர்காலம் என்பது
       கணக்கிடப்பட்டு
       மீதியுள்ள
       சுவாசக் காற்றே.....,

*     அகன்றும்
       சரிந்து ஆழமாயும்
       எல்லைகள் பரந்த
       கடல் போல் தான் வாழ்க்கை,
       எப்போதும்
       ஒரே பார்வையில்
       வரையறுக்க முடிவதேயில்லை........!!

- பகு,


ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

7. இயல்புத் தருணங்கள் (மழை)

கவிதை - 6

இயல்புத் தருணங்கள் (மழை)


*     எரிகின்ற நினைவெல்லாம் 
       அதிர்ந்து   
       அடங்கி 
       ஒரே சீராய் 
       உள்ளும் புறமும் 
       சுவாசத்தை 
       நேர்கோட்டில் உணரமுடிகிறது,

*     திரும்பிய  திசையெல்லாம் 
       கண்கள்   
       அழகை மட்டுமே 
       தரிசிக்கின்றன,
       மனம் 
       ரசனையின் 
       முடிவில்லா ஆழத்தை 
       நோக்கிப் 
       பயணிக்கிறது,

*     வெளிச்சக் கீற்றுக்களின் 
       நடனம் 
       உற்பத்தியின் பேராற்றலை 
       பிரமிக்கச் செய்கிறது,
       புரிபடாத சப்தங்கள் 
       பயமுறுத்தியும் 
       ஆச்சர்யமூட்டியும் 
       ஆனந்தக் கூச்சல்களை 
       எங்கும் பரப்புகிறது,

*     தீராக் காதல் கொண்ட மிருகமாய் 
       மழை 
       தரையைத் தழுவி 
       முத்தமிடும் 
       ஒலிகள் 
       உள்ளில் ஊடுருவி 
       நீண்ட ஏக்கங்களைத் 
       தட்டி எழுப்பியபடியே 
       இருக்கிறது,

*     விட்டுப்பிடித்தலும் 
       கொஞ்சி விடுதலும் 
       மென்மையாய் பெய்தலும் 
       முரடாய் மோதலும்,
       இயற்கையின் இரகசியங்கள் 
       ஒருபோதும் 
       எளிதில் 
       வெளிப்போந்து விடுவதில்லை 
       நாமும்
       தேடுவதில் 
       சோர்வடைவதேயில்லை......!!- பகு,

       
வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

6. யதார்த்தம்


கவிதை -5


ajhh;j;jk;


*     உழைத்து 
       உண்டு 
       உறங்கி எழும் 
       சாமான்ய  மக்களுக்கு 
       உண்டு 
       உறங்கி 
       உழைப்பைச் சுரண்டுபவரைத் 
       தெரிந்தேதான் உள்ளது..................!

*     கொஞ்சம் இன்பம் 
       கொஞ்சம் துன்பம் 
       அதிகமாய் கோபம் 
       காலம் வட்டமாய் சுழல்வது 
       இவர்களுக்கு மட்டும் தான்,
       வட்டம் தாண்டி 
       வெளியிலோ 
       உள்புகுந்து 
       நடுவிற்கோ - போவது 
       எப்பொழுதும் 
       விலைக்கே விற்கப்படுகிறது,

*     சாதி மட்டுமே 
       போதும் என்ற 
       சமரச வாழ்க்கை  - ஆனால் 
       உயர்ந்தோர் 
       தாழ்ந்தோர் சொல்லியே 
       வன்மம் வளர்க்கிறார்கள்,

*     சிலருடைய  ஆசைப் பசிக்கு 
       பலருடைய 
       வயிற்றுப் பசி 
       புறக்கணிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது......,
       நிறைவேறாத ஆசைகளுடன் 
       எதிர்காலம் நோக்கி 
       நிகழ்காலங்கள் 
       நகர்ந்துக்  கொண்டே
       இருக்கின்றன...........,

*     கீழ் இருந்து மேல் வரை 
       சமூகப் பொருளாதாரம் 
       கட்டுடைந்தே 
       காண்கிறது - எனினும் 
       குடும்பங்களின் 
       பாசப்பிணைப்புக்கள் 
       எப்பொழுதும் 
       எளியோருக்கு 
       மனப்புண் ஆற்றும் 
       மருந்தாகவே உள்ளது.- பகு,
       

 
           

5. ஊழல் மயக்கம்


 கவிதை - 4

 Coy; kaf;fk;*      செய்திகள்
        விண்நோக்கி விரைந்து
        வான் குடையாய்
        விரித்துச் சொல்கிறது,
        ஊழலைப் பற்றி,
        புலம்பல்களை உருவாக்கிக்கொண்டே............

*      சுதந்திரம்,
        பேச்சுரிமை கருத்துரிமை
        தந்ததைப் போல்
        எல்லோருக்கும்
        ஏமாற்றவும் உரிமை தந்திருக்கலாம்
        இதனால்
        ஒரு சிலரின்
        தனிப்பட்ட உரிமைகள்
        பொது உரிமையாயிருக்கும்
        பொறாமை நெருப்பை
        எரியவிடாமல்.......

*      இச்சொதியில் ஒன்றிணையும்
        சந்தர்பங்களை
        எதிர்பார்த்து
        கோடிக்கணக்கானவர்கள்
        ஆவலுடன்.......
        ஆளும் வர்கத்தினர் மட்டும்
        அதிகமாய்
        பயன் அடைவதை
        ஏக்கத்துடன் பார்த்தவாறே........

*      சிரிப்பலைகளின்
        நடுவே  - இவை
        எப்பொழுதும் மூடப்படுவதாக
        சொல்லப்படுகிறது,
        இங்கு காட்சியோ கட்சியோ
        வேறுபடுவதில்லை
        ஆட்சியை பிடிக்க
        பரபரப்பு பேச்சு ஒன்றே
        போதும்...!

*      இதைப் பேசுவது
        மக்களுக்குப் பொழுதுபோக்கு
        ஊடகங்களுக்கோ வியாபாரம்
        போராட்டக்காரர்களுக்கு
        சித்தாந்த மோதல்
        ஆனால்,
        உண்மையில் வருத்தப்படுவது
        அரசியல்வாதிகள் மட்டும்தான்
        தவறவிட்ட ஒவ்வொரு
        சந்தர்ப்பத்திற்காகவும்........!?- பகு,

புதன், 22 ஆகஸ்ட், 2012

4. வனம்

கவிதை - 3

வனம் 


>  ஒலிகள்
    குறுகியதாய்
    உடலை கூசிச் செல்லும் ஒன்றாய்
    உரையாடலாய் குழுவலாய்
    கூட்டமாக தாவிச்செல்வதாய்
    ரீங்காரமிடுவதாய்
    சோம்பல்முறிவாய்
    கேட்டுக் கொண்டேயிருக்கின்றன,

>  இந்த ஒலிகளின் பின்னணியில்
    துக்கமற்ற ஆனந்தத்தை
    மெல்லவே தழுவுகிறேன்.

    துயிலில் வரும் கனவாய்
    அறுந்து ஓடும் ஒளி நாடாக்களாய்
    சில நேரங்களில்
    தொடர்பற்ற உணர்வில்
    சிக்கித் தவிக்கிறேன்,

>  கால்கள் பாதைகளை
    புதிதாய்
    உருவாக்கிக்கொண்டே நடக்கின்றன
    சீரற்றும் சமமாயும்
    கண்டுணர முடியாத
    சரிவுகளையும் உயர்வுகளையும்
    அலைந்துத்  திரிந்து
    புரிந்து கொள்ள முயல்கின்றன,

>  பகலா இரவா
    பல இடங்களில்  புரிவதேயில்லை
    சூரியத் தாரைகள்
    தரை தொடுவதை
    பார்ப்பது இயலுவதேயில்லை
    பார்த்த ஒளிகள் கூட
    மெல்லியதாய் புகைபோல
    இலைகளின் ஊடே
    நகர்ந்தேவிடுகின்றன,

>  வல்லினமோ
    மெல்லினமோ 
    கூட்டமாகவும் தனித்தும்
    மகிழ்ந்தும் பயந்தும்
    சண்டையிட்டும் ஓலமிட்டும்
    இரை உண்டு இரை தேடி
    புணர்ந்தும் உறங்கியும்
    காட்சிப் பொருள்களாய்
    கடந்து கொண்டேயிருகின்றன

    மனதைக்
    கேள்விகளால் துளைத்துத்  துளைத்து
    இயல்பைச்
    சொல்லி நகைக்கின்றன,

>  போகின்ற வழியெல்லாம்
    தொடர்ந்து  வரும்
    சிந்தனைகள்

    சித்தனாக்கியும்
    புத்தனாய் வாழ
    ஆசை எழுப்பியும்
    இயற்கையும் நானும் ஒன்றெனச்  
    சொல்லியும

    வார்த்தைகள் அற்ற உலகின்
    ஓர்
    பகுதியாகிறது................., 
     
 
       

- பகு,


செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

3. பேருயிர்-உயிர்

கவிதை -2


பேருயிர் - உயிர்


* சுட்டெரிக்கும் திசைகளனைத்தும்
   ஒவ்வொரு நொடியிலும்
   என் பெயர் மெதுவாக உச்சரிக்கப்படுகிறது .......

* புலன்களின் உணர்வுகளை
   துறக்க வேண்டியதில்லை
   சிந்திக்கும் செயல்களை
   மறக்க வேண்டியதில்லை
   எதையும் எப்போதும்
   மனனமும் செய்ய வேண்டியதில்லை.

* ஈ என இரத்தலோ
   ஈ என கொடுத்தலோ
   இது அல்ல
   உள்ளிருந்து வெளிப்போதும்
   அன்பு தேவையில்லை
   உள்ளிலே புதைந்திருக்கும்
   வஞ்சமும் தேவையில்லை.

* இதை பொய் என்பார்
   இதை மெய் என்பார்
   எதையும் தழுவாதே
   எதையும் நினையாதே

* உன்னிலிருந்து என்னையும்
   என்னிலிருந்து உன்னையும்
   எப்பொழுதும்  காணலாம்

* தயவு செய்து
   சிந்தனை துற
   என்னுள் இருப்பது நீ
   உன்னுள் இருப்பது நான்

* நாம் பிரிக்க முடியாதவர்கள்
   பிரிந்தேவும் இருப்பவர்கள்
   காலம் தோறும் நாம் ஒன்றாகவே பயணிக்கின்றோம்

* சுட்டெரிக்கும் திசைகளனைத்தும்
   ஒவ்வொரு நொடியிலும்
   உன் பெயர் மெதுவாக உச்சரிக்கப்படுகிறது .......


 - பகு,திங்கள், 20 ஆகஸ்ட், 2012

2. கேள்வி(1)

கவிதை -1 

" கேள்வி - 1 "


*  பின்னோக்கிப்  பாயும்
    புலி பார்த்தாயா ?
    புலன் அடக்கிக்  காமம் கொள்ளும்
    துறவியைச்  சந்தித்தாயா ?
    மரம் வெட்டும் கோடாரிகள்
    பசுமை பேசுதல் கேட்டாயா ?

*  எங்குப்  பார்த்தாலும் கேட்டாலும்
    நீ என்னோடுதான் சந்திப்பாய்
    ஓர் புள்ளியில் .............

*  சித்தாந்த வேள்விகள் பலருக்கு
    உலை மூட்டும் அடுப்பு மட்டுமே
    சிறை நிரப்புதல் எல்லாம் - ஓர் நாளின்
    விளம்பரச்  செய்திகள் தான்.

*  சுடும் நெருப்பாய் பேசுவதும்
    கொட்டும் அருவியாய் கண்ணீர் சொரிவதும்
    ஊடகம் முன் உண்ணா நோன்பும்
    எதுகை மோனை  எக்காளங்களும் -  ஓர் கேளிக்கை
    நாடகத்தில் நாயகர்களின் நடிப்பே.

*  பகுத்தறிவு வார்த்தைகள் சாதி மறுக்கும்
    மூடநம்பிக்கை வெறுத்தல் மதம் மறுக்கும்
    புணர்வதற்கு பிரித்துப்  பார்க்காததும்
    அன்போடு உறவாட பிரித்துப் பார்ப்பதும்
    பொதுநல வாக்கியங்களின் உட்கரு
    சுயநலம் என்பதனால் தானே ?

*  காசுக்கு ஓட்டளித்து
    விரைவு தேவைக்குக்  கையூட்டு அளித்து
    சந்தர்ப்பம் கிடைத்தால் விதிகளை மீறி
    முச்சந்தியில் அரசியல் நேர்மை பேசுவது
    சமுதாய ஒழுக்கத்தின் கட்டமைப்பு
    நகைச்சுவைத்  துணுக்குகளால் நிரம்பியதால் தானோ  ?

*  அறிவு  வளர்க்கும் கல்விக்கு இடத்திற்கேற்ப தொகை
    பொருள் சேர்க்க மகனுக்கு நீண்டதொரு திட்டம்
    உடல் பேண நோய் தீர்க்கத்  தகுதிக்கேற்ப மருத்துவம்
    உயிர் போக விரைவாக ஆர்பாட்ட உணவு
    பணம் இருந்தால் வழியுண்டு சிந்தனை செழுமை
    பாதைகள் போவது மாயானத்திற்கு தானே ........?- பகு,